விருச்சிகம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் விருச்சிக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே குருமங்கள யோகம் உருவாகின்றது. மேலும் சூரியனும், புதனும் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே தொழில் வெற்றி நடைபோடும். தொகை வரவு திருப்தி தரும். ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக வந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகிறது. உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் பலம்பெறும் இந்தநேரம் பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். அருள்தன்மை மிக்க உங்களுக்கு அடுத்து நடக்கப் போவதை யூகித்து அறியும் ஆற்றல் உள்ளதால் எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றுச் சஞ்சரித்தாலும் அவரது பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பும் ஒருசிலருக்கு கைகூடும். அண்ணன்-தம்பிகள் அரவணைப்போடு எண்ணிய காரியங்களை எளிதில் முடிப்பீர்கள்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப திடீர் முன்னேற்றங்களும், நல்ல மாற்றங்களும் வரலாம். அதே சமயம் 7-க்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து நல்ல காரியங்களை நடத்திக் கொடுப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானம் கிடைத்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வந்து சேரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உருவாகும். பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். நல்லவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:அக்டோபர் 20, 21, 22, 25, 26, நவம்பர் 5, 6, 10, 11, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.