விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 July 2022 10:00 PM IST (Updated: 16 July 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

விடாமுயற்சியே வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் வழி என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே நற்பலன்கள் அதிகம் நடைபெறும்.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதியான அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், உயர்ந்த பொறுப்புகளும் கிடைக்கும். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். குடும்பத்தில் உதிரி வருமானம் கிடைக்கும்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் சில காரியங்கள் வெற்றி யாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். தன் சொந்த வீட்டிலேயே குரு வக்ரம் பெற்றிருப்பதால் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு தனாதிபதியானவர் குரு என்பதால், ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சுபகாரியங்கள் முடிவாகும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் குரு பகவான் அதிபதி என்பதால், அதன் வக்ர காலத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பாகப்பிரிவினை உங்களுக்குச் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள், சுயதொழில் தொடங்க முயற்சி செய்வர்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. எப்போதோ வாங்கிப் போட்ட இடம் பல மடங்கு விலை உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் செல்வ நிலை உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 29, 30, ஆகஸ்டு: 2, 3, 4, 9, 10, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் குரு பார்வை உள்ளதால் பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பர். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் எதிர்காலக் கனவை நனவாக்குவீர்கள். உங்கள் பெயரிலேயே இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்த படியே வந்துசேரும்.


Next Story