விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்க நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே நிதிநிலை உயரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். விரயாதிபதி நீச்சம் பெறுவதால் விரயங்கள் குறையும். வீடு மாற்றம், நாடு மாற்றத்திற்கான அறிகுறி தென்படும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர். அதே நேரம் சப்தமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். இது ஒரு பொற்காலமாகும். லாபாதிபதி புதன் உச்சம்பெற்று தொழில் ஸ்தானாதிபதி சூரியனுடன் இணைந்திருக்கிறார். குருவின் பார்வை அவர்கள் மீது பதிவதால், தொட்ட காரியங்கள் வெற்றியாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஏற்படும். தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் மற்றும் 6-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் செவ்வாய். 6-க்கு அதிபதி 8-ல் சஞ்சரிக்கும்பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். குரு பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இக்காலத்தில் சனியை செவ்வாய் பார்க்கும் சூழல் ஏற்படுவதால், எதிர்மறைச் சிந்தனைகள் அடிக்கடி வந்து அலைமோதும். மனக்குழப்பம் உருவாகும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ளலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். சகாய ஸ்தானாதிபதி பலம்பெறுவதால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். மனை கட்டுவது, இடம் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, ஆபரண சேர்க்கை போன்றவற்றில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவீர்கள்.
இம்மாதம் சரஸ்வதி வழிபாட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 21, 22, 26, 27, அக்டோபர்: 1, 2, 3, 7, 8, 9.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உங்கள் ராசியில் குருவின் பார்வை பதிவதால் சுபச்செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்து ஆதரவு அமைவதோடு, கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.