விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளம் சிறக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது சுப விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், வீடு மாற்றங்களைச் சந்திப்பீர்கள். கல்யாணம், கட்டிடப் பணி போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். ஒருசிலருக்கு வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய வாய்ப்புகள் வரலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தொழில் வளர்ச்சி உண்டு.

துலாம் - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அஷ்டம, லாபாதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 8-க்கு அதிபதி 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நல்ல தகவலைக் கொடுப்பர். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

மிதுன - செவ்வாய் வக்ரம்

ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறுவதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதே நேரம் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. எனவே மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். உடன்பிறப்புக்காகவும், உடன் இருப்பவர்களுக்காகவும் செலவிட நேரிடும். 6-க்கு அதிபதியாக விளங்கும் செவ்வாய், அஷ்டமத்தில் வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். இதனால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.

விருச்சிக - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்யத்தை நடத்து வார். எனவே செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பயணங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட தூரத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். பொருளாதார நிலை உயரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் கைகூடும்.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். இவர் ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால், அவரது பார்வைக்கு வலிமை அதிகரிக்கும். அவர் உங்கள் ராசியை தற்சமயம் பார்ப்பதால் வக்ர நிவர்த்திக்குப் பிறகு வளர்ச்சி கூடும். வருமானம் பெருகும். தளர்ச்சி அகலும். தன்னிச்சையாகச் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கலாம்.

இம்மாதம் பிரதோஷ நேரத்தில் நந்தியை வழிபடுவதன் மூலம் நலங்களும், வளங்களும் வந்து சேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 17, 18, 20, 24, 25, 30, 31, நவம்பர்: 3, 4, 14, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

பெண்களுக்கான பலன்கள்

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களும், உடன்பிறப்புகளும் உதவிக்கரம் நீட்டுவர். வாங்கல் - கொடுக்கல்கள் திருப்தி தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சு கைகூடும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதோடு உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.


Next Story