விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:45 PM GMT)

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

சந்தோஷத்தை நாளும் சந்திக்க வேண்டும் என்று விரும்பும் விருச்சிக ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8-ம் இடத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதே நேரத்தில் குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். ஏற்றம் தரும் விதம் பொருளாதார நிலை உயரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தற்சமயம் வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்றுவிட்டார். எனவே வெற்றிக்குரிய தகவல்கள் வீடு தேடி வரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளும் உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுவதால் அற்புதமான பலன்கள் வந்து சேரும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மிகுந்த யோகம் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, ஏராளமான நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரப்போகிறது. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.

தனுசு - புதன் சஞ்சாரம்

கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். எனவே லாபாதிபதி புதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி மேலோங்கும். லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் வந்து சேரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் அடியெடுத்து வைப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.

தனுசு - சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். விரயாதிபதியான அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது, விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு. எந்தக் காரியத்தையும் தொடங்கிவிட்டால் அதற்குரிய தொகை வந்து சேரும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளை முன்நின்று நடத்தி வைப்பீர்கள். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.

இம்மாதம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டு வருவதன் மூலம் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 20, 21, 26, 27, 28, டிசம்பர்: 1, 2, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் குரு வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியைப் பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும். புதிய பாதை புலப்படும். அருளாளர்களின் ஆசியால் நன்மை கிடைக்கும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையை உணர்வர்.


Next Story