விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். பலம்பெற்று சஞ்சரிக்கும் குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் பணவரவு தாமதப்பட்டாலும் திடீர் திடீரெனப் பெருந்தொகைகள் வந்து மகிழ்ச்சியைத் தரும். தொழில் வர்த்தகத் துறையில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற விதத்தில் சம்பளமும் கிடைக்கலாம். இலாகா மாற்றங்கள் இனிமை தரும்.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். களத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல்கள் கிடைக்கும். குறிப்பாக அவர்கள் உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். அனுகூலமான விரயங்கள் உண்டு. அரைகுறையாக நின்ற காரியங்கள் செவ்வனே முடியும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து கடமையை முடித்துக் கொடுப்பர். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகம், தொழில் ரீதியான அழைப்புகள் வரலாம்.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால், யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். குறிப்பாக லாபாதிபதி பலம்பெறும்போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கும் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் செவ்வாய். உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். தொழில் வளம் பெருகும். கிளைத் தொழில்கள் தொடங்க, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.

6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் அதன் வக்ர நிவர்த்தி காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். தங்கள் முன்னேற்றத்தை சக பணியாளர்களிடம் சொல்ல வேண்டாம். செவ்வாய் பார்வை உங்கள் ராசியின் மீது பதிவதால் துணிந்து சில முடிவுகளை எடுத்து துயரங்களை வெளியேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

இம்மாதம் நடராஜப் பெருமான் வழிபாடு நலம் யாவும் வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 18, 23, 24, 28, 29, ஜனவரி: 8, 9, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் குருவின் பார்வையால் குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி ஆதரவும், உடன்பிறப்புகளின் உதவியும் திருப்தி தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரலாம். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.


Next Story