விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை

சொல்லும் சொற்களை வெல்லும் சொற்களாக மாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தனவரவு கூடும். மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். இல்லம் வாங்குவது அல்லது இல்லம் கட்டிக் குடியேறுவது போன்றவற்றை செயல்படுத்தும் நேரம் இது. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தன ஸ்தானத்தில் புதன் சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வளர்ச்சியில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

3-ம் இடத்தில் சூரியன், சனி, சுக்ரன் இணைந்துள்ளனர். பஞ்சம ஸ்தானத்தில் குரு பலம்பெற்றிருக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவதால் பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தால் புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி பெறுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.

சூரியன் - சனி சேர்க்கை

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். சகாய ஸ்தானாதிபதியானவர் சனி பகவான். பகைக் கிரகங்களான இருவரும் ஒரே இடத்தில் இருந்தாலும், நல்ல இடத்து ஆதிபத்யங்கள் ஒன்றுகூடுவதாலும், அதோடு சப்தமாதிபதி சுக்ரன் இருவரோடும் இணைந்திருப்பதாலும் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சகோதர வழியில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைக்கும். சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி பகவான் இருப்பதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

கும்ப - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். 4-ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு வரும் சுக்ரனால், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக புதிய முதலீடுகள் செய்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. வீடு, மனை வாங்கும் அமைப்பு உருவாகலாம். பணிபுரியுமிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை வந்துசேரும். அரசு வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு அது கைகூடலாம். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மகர - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். சகாய ஸ்தானத்திற்கு புதன் வரும்பொழுது, இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. பணிபுரியுமிடத்தில் உங்களது மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கூடுதல் பொறுப்புகளும், கூடுதல் சம்பளமும் கிடைக்க வழிபிறக்கும்.

இம்மாதம் ஞாயிறு தோறும் சூரியனை வழிபடுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 19, 20, 21, 24, 25, பிப்ரவரி: 4, 5, 6, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.


Next Story