விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
எதிர்காலத்தை இனியதாக மாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தை பார்க்கிறார். எனவே பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசியின் மீது குரு பார்வையும் பதிவதால், தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்து சனி சஞ்சரிக்கிறார். இதனால் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியிலும், 9,11 ஆகிய இடங்களிலும் பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ம் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே நன்மைகள் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வந்துசேரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் இடம், பூமி வாங்குவது அல்லது வீடு கட்டிக் குடியேறுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியான புதன், 4-ம் இடத்திற்கு செல்லும் பொழுது தாய்வழி ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடிவரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
மீன - புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்கும் புதன், நீச்சம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். அதே நேரத்தில் நீச்சம் பெற்ற புதன், குருவோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார். இதனால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரைகுறையாக நின்ற பணிகள் அனைத்தும் நடைபெறும். வெளிநாட்டில் இருந்து நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கலாம்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், 6-ம் இடத்திற்கு வரும்பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழில் நடத்துபவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வளர்ச்சி கூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். செவ்வாயின் பார்வை சனி மீது பதிவதால் சகோதர வர்க்கத்தினர்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். இருப்பினும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 16, 17, 18, 21, 22, மார்ச்: 4, 5, 8, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குடும்ப முன்னேற்றம் கூடும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.