விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுடன் இருந்த சலசலப்புகள் மாறும். பேச்சுத் திறமை யால் காரியங்களை சாதிப்பீர்கள். உற்ற நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வெற்றி வாகை கைகூட வழிவகுத்துக் கொடுப்பர். கரைந்த சேமிப்புகள் மீண்டும் வந்து சேரும். உறைந்த பனிக்கட்டிபோல் உள்ளம் குளிர்ச்சியாகும்.

இம்மாதம் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை சகாய ஸ்தானத்தில் உள்ள சனியின் மீது பதிவதால், ஒருசில காரியங்களில் கவனத்தோடு இருப்பது நல்லது. வீடு, இடம் தொடர்பான விஷயங்களில் வில்லங்கம் இல்லை என்பதை உறுதி செய்து வாங்குங்கள். உறவுகளுக்குள் இருந்த உரசல்கள் மாற, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வரவுக்கு மத்தியில் செலவுகள் அதிகரித்தாலும், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அதிகம் பெற்ற நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது வரும் முட்டுக்கட்டைகள் அகல வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். கசந்த காலங்களை வசந்த காலமாக மாற்றுவது வழிபாடுகள் தான்.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான புதன், 6-ம் இடத்திற்கு செல்கிறார். எனவே பெயர், புகழ், கீர்த்தி அதிகரிக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். விபரீத ராஜயோக அடிப்படையில் புதன் செயல்படும் என்பதால், மனக்கவலை மாறும். மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பார்த்தோர் வியக்கும் வண்ணம் வாழ்க்கை அமையும். எதிரிகள் உதிரிகளாவர். லாபம் எளிதில் கிடைக்க வழி பிறக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு கூடும். உயர் பதவியும், ஊதியத்தில் உயர்வும் கிடைத்து சந்தோஷத்தை சந்திக்கும் சூழ்நிலை உண்டு.

ரிஷப - சுக்ரன்

பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியாக சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே திருமண வாய்ப்புகளில் இருந்த தேக்க நிலை மாறும். அருமையான வாழ்க்கைத் துணை அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவது முதல் அதிநவீன எந்திரங்கள் வாங்குவது வரை செயல்படும் நேரம் இது. மனதில் தோன்றியதை மறுகணமே செய்து முடிக்கப் பணவரவும் உண்டு. பக்கபலமாக நண்பர்களும் உண்டு. தொழில் வளர்ச்சிக்குத் தொகையும் வந்து சேரும். புதிய கூட்டாளிகளும் வந்திணைவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் நடத்துபவர்கள் போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பர். கலைஞர்களுக்கு ஒளிமயமான வாழ்வு அமைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்களுக்கு நினைவுத்திறன் அதிகரித்து வெற்றி வாகை சூடுவர். உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கைகூடும். பெண்களுக்கு பாசத்திற்குரிய தம்பதியர்களாக மாறும் வாய்ப்பு உண்டு. பல்வேறு வகையில் உதவிகள் கிடைக்கும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 15, 16, 20, 21, 30, 31, ஏப்ரல்: 1, 6, 7, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.


Next Story