விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

நேர்மறை எண்ணங்களால் நிகழ்காலத்தை வளமாக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8-ம் இடத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கின்றார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். 4-ல் சனி இருப்பதால் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் சனி பகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதை 'அர்த்தாஷ்டமச் சனி' என்றும் சொல்வார்கள். உங்களைப் பொறுத்தவரை சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சிறுசிறு தொல்லைகள் அவ்வப்போது வந்து அலைமோதினாலும் வழிபாட்டின் மூலம் அதன் கடுமையைக் குறைத்துக்கொள்ள இயலும்.

குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்தாலும் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். செல்வச் செழிப்பும், செல்வாக்கும் எப்பொழுதும் போல இருக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றிபெறும். தன்னம்பிக்கையும், தைரியமும், அதிகரிக்கும்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது அதன் பார்வை பலத்தால் நற்பலன்களை வழங்குவார். 'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறுக்கீடுகள் அகலும். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்க இயலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்திற்கு நெருக்கமாவதோடு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சகப் பணியாளர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் வந்துசேரும்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதியான சுக்ரன் அஷ்டமத்துக்கு வரும்போது, இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். கல்யாணம், மணி விழா, கடை திறப்பு விழா போன்றவைகள் நடைபெற சுக்ரன் ஆதிக்கம் கைகொடுக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பகை மறந்து பாசம் காட்ட உறவினர்கள் முன்வருவர். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். தொழில்வளம் சிறப்பாக இருக்கும்.

இம்மாதம் விநாயகப்பெருமான் வழிபாடு வெற்றிகளை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 28, 29, மே: 2, 3, 4, 8, 9, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.


Next Story