விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

சொல்லும் சொற்களை வெல்லும் சொற்களாக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளால் வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பீர்கள். உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

ராகு-கேது சஞ்சாரம்

பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகுவும், கேதுவும் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றனர். 6-ல் ராகு குருவுடன் இணைந்திருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொழில் வெற்றி நடைபோடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள். வாங்கல் - கொடுக்கல்களில் சுமுகநிலை ஏற்படும். அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கேது பலத்தால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் மங்கள யோகம் பெறுவதால் குடும்பத்தில் மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கூட்டாளிகள் லாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய திருப்பங்களைக் காண்பீர்கள்.

ரிஷப - புதன்

வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பது, ஒரு பொன்னான நேரமாகும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டு. இல்லம் தேடி சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். தெளிவான சிந்தனையோடு தேர்ந்தெடுத்த தொழிலில் லாபம் குவிப்பீர்கள். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டிலிருந்து ஆதாயம் தரும் அழைப்புகள் வரலாம். புயல் வேகத்தில் முன்னேற்றம் காணும் நேரமிது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாகத் தேடிவரலாம். தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். வருமானம் உயரும். பெற்றோர்களின் ஆதரவும் கூடும். பெண்களின் பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷம் ஏற்படும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே:15, 25, 26, ஜூன்: 4, 5, 6, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.


Next Story