விருச்சிகம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்


விருச்சிகம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

சாதனைகள் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம்பெறும் விருச்சிக ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்களுடன் கூட்டாக இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறார். எனவே தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். அர்த்தாஷ்டமச் சனி இம்மாதம் விலகுவதால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்லதுதான். புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாகவே இருக்கும். அதிக முயற்சி செய்யாமலேயே சில காரியங்கள் அடுத்தடுத்து முடிவிற்கு வந்து விடும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. வீடு, வாகனம் வாங்குவது பற்றியும் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்த்த தலைமைப் பதவிகள் இப்பொழுது கிடைக்கலாம்.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவதால், பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். 6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் உத்தியோகத்தில் இருந்தபடியே ஒருசிலருக்கு சுயதொழில் செய்யும் வாய்ப்பு கைகூடும். ஒருசிலர் உத்தியோகத்தில் இருந்து விலகி சுயதொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல சம்பளம் தருவதாகச் சொல்லி அழைப்புகள் வரலாம்.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கமாக செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றத்தால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். அர்த்தாஷ்டமத்தில் இருந்து விலகி, சகாய ஸ்தானத்திற்கு சனி வருகிறார். எனவே இதுவரை எவை எவையெல்லாம் நடைபெறாமல் இருந்ததோ, அவையெல்லாம் துரிதமாக நடைபெறும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். பொருளாதார நிலை உச்சம் பெறும். சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக விளங்கும் புதன், வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலை உருவாகும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கலாம். ஆரோக்கியத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முக்கியப் புள்ளிகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி நிறுவனங்களின் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வருமானமும், வாய்ப்புகளும் வந்து கொண்டேஇருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற ஊதியமும் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 22, 26, 27, 31, செப்டம்பர்: 1, 10, 11, 16, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.


Next Story