விருச்சிகம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்


விருச்சிகம்  - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை

வெற்றி ஒன்றே குறிக்கோளாக செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். சகாய ஸ்தானத்தில் சனி இருப்பதால் இம்மாதம் உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேறும்.

புதன் வக்ரம்

புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதியாகவும், புதன் விளங்குவதால் அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாதிருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு. உயர்அதிகாரிகள் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவர். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ஒருதொகை செலவழிந்த பின்னரே மற்றொரு தொகை கரங்களில் புரளும்.

துலாம் - செவ்வாய்

புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர். 6-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 12-ம் இடத்திற்கு வரும்பொழுது, எதிர்பாராத நல்ல திருப்பங்களை உருவாக்குவார். வாகன யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்து சேரும். தேகநலன் சீராகும். செல்வநிலை உயரும். குருவின் பார்வை செவ்வாயின் மீது பதிவதால் 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது.

துலாம் - புதன்

புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 8-க்கு அதிபதி 12-ல் வரும் இந்த நேரம் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். இடமாற்றம், வீடுமாற்றம் இனிமை தரும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வுகள் இப்பொழுது தானாக வரலாம். மேலும் வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் மூலம் ஆச்சரியப்படும் தகவலும் கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பர். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதிச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 23, 24, 27, 28, அக்டோபர்: 8, 9, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.


Next Story