விருச்சகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


விருச்சகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:25 PM IST (Updated: 17 May 2022 1:27 PM IST)
t-max-icont-min-icon

(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவா்களுக்கும்

ஆறில் ராகு வருகிறது; அனைத்திலும் யோகம் தருகிறது விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி 6-ம் இடத்திற்கு வரப்போகிறார். 6-ல் ராகு இருந்து குரு கேந்திரத்தில் இருப்பதால் 'அஷ்டலட்சுமி யோகம்' உருவாகிறது. அதே சமயம் கேது 12-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே தொழில் முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அதே இடத்தில் சஞ்சரித்து அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.

அதிர்ஷ்டம் தரும் ராகு, சுபவிரயம் தரும் கேது

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கப் போகிறார். தொழிலில் தனலாபம் கிடைத்து நினைத்த தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை வந்து சேரும். வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காணும் நேரம் இது.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சாரம் (21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு அனைத்துக் காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் வந்துசேரும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். இக்காலம் உங்களுக்கு யோகமான காலம்தான்.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பயணங்களால் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பும், கட்டிடப் பணி செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. பாதியில் நின்ற திருமணப் பேச்சு கூட இப்போது தொடரலாம். பெரிய மூலதனங்கள் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முன்வருவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதன் மூலம் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடித்து வேண்டிய சலுகைகளைப் பெறுவீர்கள்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்களைப் பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சினை வரலாம். திடீர் பயணங்களும், அதனால் சில மனக்குழப்பங்களும் ஏற்படலாம். நல்ல நண்பர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத ஒரு சில காரியங்கள் இப்போது நடைபெறலாம். புதிய பங்குதாரர்கள் தொழில் கூட்டாளியாக மாறி பொருளாதாரத்தை அதிகரிக்க வைப்பர். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றியாகும்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பணப்புழக்கம் நன்றாக இருக்கும். நண்பர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டு. படித்து முடித்த பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. பூர்வீக சொத்துக்களைக் கொண்டு அதில் புதிய கட்டிடங்கள் கட்டும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அண்ணன், தம்பிகளின் அரவணைப்பாலும், அருகில் இருப்பவர்களின் ஆதரவாலும் எண்ணிய காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியம் சீராகும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் கிடைக்கலாம். நல்ல மனிதர்களின் நட்பைப் பெறுவீர்கள். தொழிலில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய பாக்கிகளை கொடுத்து மகிழ்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவர். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. இது ஒரு அற்புதமான நேரம் ஆகும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகள் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். வருமானம் பல வழிகளிலும் வந்துசேரும். அடுத்ததாக 22.4.2023 அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்குச் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். அது உங்கள் ராசிக்கு 4-ம் இடம் ஆகும். சனி பார்க்கும் இடத்தைக் காட்டிலும், இருக்கும் இடத்திற்கு பலன் அதிகம். அதன்படி சனி பகவான், தன்னுடைய சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் வீடு கட்டும் வாய்ப்பு அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் லாபம் பெறலாம்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களுக்கு நன்மை தரும் பெயர்ச்சியாகவே அமையப் போகிறது. உடல்நலம் சீராகும். உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும் உண்டு. நாக கவசம் பாடி ராகு - கேதுக்களை வழிபடுவதன் மூலம் நன்மைகளை அதிகம் பெறலாம்.


Next Story