ரிஷபம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரய ஸ்தானத்தில் லாபாதிபதி குரு இருப்பதால் விரயத்திற்கு ஏற்ற வருமானம் உண்டு. வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படலாம். வரும் மாற்றங்கள் நன்மை தரும் விதம் அமையும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் இடையூறு சக்திகள் அகலும். இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.
புதன் வக்ரம்
புரட்டாசி மாதம் 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். தன - பஞ்சமாதிபதியான புதன் உச்சம் பெறும் பொழுது பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. பிள்ளைகளின் வழியில் இதுவரை தாமதப்பட்ட காரியங்கள் இனி ஒவ்வொன்றாக நடைபெறும். சில்லரைக் கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
துலாம் - செவ்வாய்
புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். சப்தம - விரயாதிபதியான செவ்வாய் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, வாழ்க்கைத் துணை வழியே எடுத்த சில முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை அல்லது தொழில் சம்பந்தமாகச் செய்யும் முயற்சிகள் கைகூடும். 'வாங்கிய இடத்தை விற்க முடியவில்லையே, வாங்கிய இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே' என்றெல்லாம் வருத்தப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். செவ்வாய் விரயாதிபதியாகவும் விளங்குவதால் ஒருசில நல்ல காரியங்களுக்காகச் செலவிடும் சூழல் உண்டு.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மறைவிடத்திற்கு வருகிறாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பொருளாதார நிலை உயரும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்துமுடிக்க இயலும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். சுபகாரிய முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 25, 26, 29, 30, அக்டோபர்: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.