ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆற்றலைப் பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

புதன் வக்ர இயக்கம்

மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். வாக்கு, தனம், குடும்பம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், வக்ரம் பெற்று இப்படி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகி மறையும். குழந்தைகளை நெறிப்படுத்தி வளர்ப்பதோடு உங்கள் மேற்பார்வையிலும் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பிரச்சினை மேல் பிரச்சினை அதிகரிக்கும்.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

மார்கழி 15-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கும் 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். எதிரிகள் விலகுவர். லாபம் திருப்தி தரும். புதியவர்களின் தொடர்பால் பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நிறைய மாற்றங்களை சந்திக்கப் போகிறீர்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நிறைந்த மனதோடு நிம்மதி கிடைக்கும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், வக்ர நிவர்த்தியாவதால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம்.

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கும் அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உடன்பிறப்புகளால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணிநிரந்தரமாகும். பயணங்களால் பலன் கிடைக்கும் நேரம் இது.

இம்மாதம் பிரதோஷ காலத்தில் சிவன், உமையவள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 26, 27, 30, 31, ஜனவரி: 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.


Next Story