ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை
விடாமுயற்சியால் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். உங்கள் ராசியிலேயே தனாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். எனவே விரயத்திற்கேற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 4-ந் தேதி, உங்கள் ராசிநாதனான சுக்ரன், உங்கள் ராசிக்கே வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கும் அதிபதியானவா். உங்கள் ராசியில் இருக்கும் புதனோடு, சுக்ரன் இணைவதால் 'புத சுக்ர யோகம்' ஏற்படுகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் அனுகூலமும், ஆதாயமும் கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.
மிதுன - புதன் சஞ்சாரம்
ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். மிதுனம் புதனுக்கு சொந்த வீடாகும். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகின்றார். எனவே பொதுவாழ்வில் புகழ் கூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.
மேஷ - செவ்வாய் சஞ்சாரம்
ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத சில விரயங்கள் ஏற்படலாம். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். பணப்பொறுப்பில் இருப்பவர்கள், கவனச் சிதறல் இல்லாமல் செயல்படுங்கள்.
கடக - புதன் சஞ்சாரம்
ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். தடைபட்டு வந்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். வழக்குகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.
மிதுன - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த வேளையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வழிபிறக்கும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். ஜீவன ஸ்தானாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ்மிக்கவர்களைக் கொண்டு காரியங்களை சாதிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
இம்மாதம் பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டு நந்தியம்பெருமானை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 22, 23, 29, 30, ஜூலை: 4, 5, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதத் தொடக்கத்தில் விரயங்கள் ஏற்பட்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் பணவரவு திருப்தியாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, அலுவலகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அதுவும் கைகூடலாம். தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு திருப்தியளிக்கும்.