ரிஷபம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


ரிஷபம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 7:39 AM GMT (Updated: 29 May 2023 1:00 PM GMT)

(கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்

பன்னிரண்டில் வருகிறது ராகு; பணவிரயம் உண்டு கவனம் தேவை

ரிஷப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் 6-ம் இடத்திற்கு கேது வரப்போகிறார். ஜென்மத்தை விட்டு பாம்பு கிரகம் விலகும் பொழுது, நல்ல பலன்களை வழங்கும் என்பது ஜோதிட நியதி. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து நட்சத்திர பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவர்.

விரய ராகு, 6-ம் இடத்து கேது

ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போவது உங்கள் ராசிக்கு 12-ம் இடமாகும். இதனால் விரயங்கள் அதிகரிக்கும் என்பது பொதுவான நியதி. பயண ஸ்தானம் என்றும் பன்னிரண்டாம் இடத்தைச் சொல்வது வழக்கம். எனவே நீண்ட தூரப் பயணங்கள், ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். வரும் மாற்றங்கள் நன்மை தருவதாகவே அமையும். சுபவியரங்கள் அதிகரிக்கும். உலுக்கி எடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மனப்போராட்டம் அகல நண்பர்கள் வழிகாட்டுவர். 6-ம் இடத்தில் கேது இருப்பதால் எதிரிகளால் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. அடிக்கடி உடல்நலச் சீர்கேடுகள் உருவாகும். எனவே சர்ப்ப தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்களை அனுகூல நாளில் செய்வது நல்லது.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வசதி, வாய்ப்புகள் பெருகும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'இரவு, பகலாக பாடுபட்டும் இதுவரை பலன் கிடைக்கவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு உழைப் பிற்கேற்ற பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை மாற்று மருத்துவத்தால் சீர்செய்து கொள்ளலாம். தாய்வழி ஆதரவு உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு அருகில் இருந்து நல்ல ஆலோசனைகளைக் கூறுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு ஒரு நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வாங்கிய கடனில் பாதிக்குமேல் கொடுத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். தீட்டிய திட்டங்கள் ஒவ்வொன்றாக வெற்றிபெறும்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம். அது இனிமை தருவதாக இருக்காது. குடும்பப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். காரணம், உங்கள் ராசிக்கு அஷ்டம -லாபாதிபதியாக விளங்குபவர் குரு. எனவே வரவும், செலவும் சமமாகவே இருக்கும். செய்யும் முயற்சிகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே வெற்றி பெற முடியும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நல்ல காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். வாசல் தேடி வந்த வரன்கள் திரும்பிச் சென்றாலும், திடீரெனப் புதிதாக திருமணப் பேச்சு ஒன்று வந்து முடிவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வது அரிது.

ராகு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பணிச்சுமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். பயணங்களால் பலன் கிடைப்பது அரிது. திடீரென உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு திக்கு முக்காட வைக்கலாம். அருளாளர்களின் ஆலோசனைகளும், அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளும்தான், இக்காலத்தில் வரும் இடர்பாடுகளை நீக்க வழிகாட்டும். சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாது என்பதால், எதையும் கொஞ்சம் யோசித்துச் சொல்வது நல்லது.

செவ்வாய் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சரிந்து கிடந்த பொருளாதார நிலை சகஜ நிலைக்கு வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். என்றாலும் பொருளாதார நெருக்கடி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அமைதியான வாழ்க்கை அமைய வாழ்க்கைத் துணையோடு விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பெரிய மனிதர்களின் ஆதரவை தக்க வைத்துக்கொள்வது நல்லது.

குருப்பெயர்ச்சிக் காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். குருவின் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைகிறது. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். வரன்கள் வாசல் தேடி வரும். 22.4.2023 அன்று மேஷ ராசிக்கு குரு பெயர்கிறார். இதனால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். ஊதிய உயர்வும் வந்துசேரும். பாகப்பிரிவினை நல்ல முடிவிற்கு வரும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு, சனி பகவான் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது யோகம்தான். தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு, தலைமைப் பதவி வகிக்க வாய்ப்புகள் கைகூடி வரும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன் - மனைவி இடையே பாசமும், நேசமும் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமைப்படத்தக்கதாக அமையும். வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது வீடு வாங்கும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், இலாகா மாற்றமும் வந்து சேரலாம். பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.


Next Story