கன்னி - பிலவ ஆண்டு பலன்


கன்னி - பிலவ ஆண்டு பலன்
தினத்தந்தி 23 May 2022 9:28 PM IST (Updated: 23 May 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

14.4.2022 முதல் 13.4.2023 வரை

(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்

குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும்

கன்னி ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டில் குரு பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே ஆண்டு முழுவதும், வேண்டிய நற்பலன்கள் வரப்போகிறது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையும், தேசப்பற்றுமிக்கவர்களின் பழக்கத்தால் முன்னேற்றமும் ஏற்படப் போகின்றது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், 8-ம் இடத்தில் பன்னிரண்டுக்கு அதிபதியான சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, நல்ல பலன்கள் அதிகமாக இல்லம் தேடி வரப்போகிறது. மறைந்த புதனால் நிறைந்த தன லாபமும், நிறைந்த கல்வியும் கிடைக்கும். எனவே எதிர்பார்த்ததைக் காட்டிலும் தொழிலில் கூடுதலாக லாபம் கிடைக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சேமிப்பு உயரும். செய்தொழிலில் கிளைத்தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம்.

அஷ்டமத்தில் ராகுவும், இரண்டில் கேதுவும் இருப்பதால் சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. அதே நேரத்தில் ஆன்மிகப் பாதையில் அடிெயடுத்து வைப்பீர்கள். அன்னதானம், வஸ்திரதானம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு உண்டு. ஒரு காரியத்தை தொடங்கிவிட்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து அதற்குரிய தொகை வந்து சேரும். எனவே அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். ராகு - கேது களுக்குரிய வழிபாடுகளை முறையாகச் செய்வதன் மூலம் முன்னேற்றப் பாதையில் உள்ள முட்டுக்கட்டைகள் அகலும்.

வருடத் தொடக்கத்தில் 6-ம் இடத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை பெற்றுள்ளது. 8-க்கு அதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான். அதுவும் தனாதிபதி சுக்ரனோடு இணைந்து சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகளின் வழியே உதவிகள் கிடைக்கும். கடன்சுமை குறைய வழிபிறக்கும். கவலை அகலும் நேரம் இது. நன்மை அதிகம் நடைபெறும். வருமானம் படிப்படியாக உயரும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில், தன் சொந்த வீட்டில் சனி இருக்கிறார். இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. அதனால் வரவேண்டிய யோகங்கள் எல்லாம் வந்து சேரும். கசந்த காலங்கள் எல்லாம் இனி வசந்த காலமாக மாறும். குழப்பமான மனநிலை இனி குதூகலமாக அமையும். கவலையான வாழ்க்கை இனி மாறி பணப்புழக்கத்தோடு மகிழ்ச்சியாக அமையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

குரு சப்தம ஸ்தானத்தில் இருந்து பார்ப்பதால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையலாம். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருந்த இடம் தெரியாமல் மறையும். திரும்பும் பக்கமெல்லாம் நன்மை கிடைக்கும் விதத்தில் குருவின் சஞ்சாரம் இருக்கிறது. சுக ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, பலம் பெற்று சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம், புதிய திட்டங்களில் வெற்றி, செய்தொழிலை விரிவுபடுத்துவதில் ஆர்வம், பொருள் சேர்க்கை, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

குருவின் பார்வை பலன்

ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியத் தொல்லை அகலும். அன்பும், ஆதரவும் தரும் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். திட்டமிட்ட காரியங்களை உற்சாகத்துடன் நடத்தி முடிப்பீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப பிரச்சினைகள் குறையும். தெய்வ பலமும், தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்திச் செல்லும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெற்றிகள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், உத்தியோகம் தொடர்பாக வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். லாப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்

25.6.2022 முதல் 9.10.2022 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். சனியின் வக்ர காலத்தில் பிள்ளைகளால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு கள் வரலாம். 29.3.2023-ல் கும்ப ராசிக்குச் சனி செல்கிறார். அதன் பிறகு தொழில் செய்வோர் புதிய கிளைத்தொழில் தொடங்க முயற்சிப்பர். அதற்கு அரசு வழி ஆதரவும் கிடைக்கும். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய குரு கவசம் பாடி, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் வருடத் தொடக்கத்திலேயே குரு பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கடன்சுமை குறையும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். குரு, சனி வக்ர காலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாயை, மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார்.இந்த இரு கிரகங்களின் பார்வையால், குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். தொழில் பங்குதாரர்களால் பிரச்சினை வரலாம். ஆரோக்கியத் தொல்லை அச்சுறுத்தும். முடிந்துவிட்டதாக நினைத்த பிள்ளைகளின் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.


Next Story