கன்னி - தமிழ் மாத ஜோதிடம்


கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:46 PM GMT)

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

எதையும் யோசித்துப் பேசும் கன்னி ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். அவரோடு சூரியனும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கின்றார்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பொருளாதாரப் பிரச்சினை அகலும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், மணி விழா என்று கொண்டாட்டங்கள் பலவும் வந்துகொண்டே இருக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்புச் செய்வர். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்து அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கின்றார். அவர் ஆட்சிபலம் பெற்று சஞ்சரிப்பது யோகம்தான். வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெறுவீர்கள். கூச்சலிட்ட எதிரிகள் விலகுவர். கொடுக்கல் - வாங்கல்கள் சுமுகமாக நடைபெறும். நாட்பட்ட நோய் அகல, மருத்துவ ஆலோசனை கைகொடுக்கும். பணிபுரியும் இடத்தில் பல மாதங்களாக நடைபெற்ற பிரச்சினை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன்சுமை குறையத் தொடங்கும். செவ்வாய்-சனி பார்வை இருப்பதால் உறவினர் பகை உருவாகலாம்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் குரு பகவான் அடியெடுத்து வைப்பதால் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அடுத்தவர்களுக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புக் கரையும்.

குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பார்வை பலனால் ஒருசில நன்மைகள் நடைபெறலாம். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் உண்டு. ஆனால் தொழில் உத்தியோகத்தில் மறைமுக போட்டிகள் காணப்படும். அதனால் குறிப்பிட்ட இலக்கை அடையவிடாமல் செய்துவிடும். பணியாளர்களை பகைத்துக் கொள்ளாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதி பதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வரும் போது, எந்த தொழில் செய்தாலும் ஏற்றம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். எந்தப் புது முயற்சிகள் செய்தாலும் குடும்ப உறுப்பினர்களை கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். பெண்களால் பெருமை சேரும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெற்று சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திப் பெருமை காண்பீர்கள்.

இம்மாதம் நடராஜர் வழிபாடு நன்மைகளை வாரி வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 22, 23, 27, 28, மே: 4, 5, 9, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.


Next Story