கன்னி - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


கன்னி - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:21 PM IST (Updated: 17 May 2022 1:23 PM IST)
t-max-icont-min-icon

(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: பா, பி, பு, பூ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்

எட்டில் வருகிறது ராகு; எதிலும் கவனம் இனி தேவை கன்னி ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் 8-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே நாளில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்து 2-ம் இடமான வாக்கு, தனம், குடும்பம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு வரப்போகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

அஷ்டமத்தில் ராகு, தன ஸ்தானத்தில் கேது

ராகு பகவான் வரப்போவது, 8-ம் இடம் என்பதால் ஓரளவு உங்களுக்கு பய உணர்ச்சி வரலாம். இருந்தாலும் 'மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்' என்பது பழமொழி. எனவே பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது. வருமானம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து வந்து கொண்டேயிருக்கும். ஆனால் விரயங்கள் அதற்கு முன்னதாகவே வந்து காத்திருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். கூட்டாளிகள் மாற்றம், குடியிருக்கும் வீட்டில் மாற்றம் ஏற்படும். போட்டிக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் போதுமான வருமானம் இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும். ராகு-கேதுக்களுக்குரிய சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு அனுகூலம் தரும் தலங்களைத் தேர்ந்தெடுத்து, யோகபலம் பெற்ற நாளில் செய்தால் அதன் கடுமை குறைந்து நன்மை ஏற்படும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பும் விதத்தில் அமைவது அரிது. நட்பு பகையாகலாம். நாணயத்தை காப்பாற்ற இயலாது. அவ்வப்போது குணம் மாறி பல காரியங்களைச் செய்ய இயலாமல் போகலாம். சேமிப்பு கரையும், செலவுகள் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் பகையால் சில காரியங்கள் ஸ்தம்பித்து நிற்கலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். வாழ்க்கைத் தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வாய்ப்புகளை உபயோகித்துக் கொள்ள முன்வருவீர்கள். சுக்ரன் உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால் பாக்கிய ஸ்தானத்திற்குரிய கிரகம் எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். கடந்த ராகு - கேது பெயர்ச்சியில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது, குடும்ப ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல்நலத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவை ஏற்படுத்தும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கலாம். கொடுக்கல்- வாங்கலில் மாற்றங்கள் உண்டு. சங்கிலித் தொடர்போல கடன் சுமை ஏற்படலாம். 'சகஜ நிலைக்கு பொருளாதாரம் எப்போது வரும்' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. 'தெய்வ வழிபாடுகளை திருப்தியாகச் செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் உங்களுக்குத் தடைகளை ஓரளவு அகற்றும்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். வீடுகட்டும் முயற்சி கைகூடும். பஞ்சாயத்துக்களில் இருந்த தாமதங்கள் அகலும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காது. வெளிநாடு அல்லது வெளிமாநிலங்கள் சென்று உத்தியோகம் பார்க்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். அளவிற்கு மீறிய விரயங்கள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் செலவுகளைச் சமாளிக்க இயலாமல் கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். குடும்பத்தில் அனுசரிப்பு குறையும். உடன் இருப்பவர்கள் பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதார உதவி கிடைப்பது போல் தோன்றி கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை அதிகரிக்கும். கேட்ட சலுகைகள் கிடைக்காது. மேலதிகாரிகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரிபவர்களால் வீண்பழிகள் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். எதைச் செய்தாலும் குடும்பத்தினர் குற்றம், குறை காண்பர். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும் என்பதால் உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. தகுந்த ஓய்வும், உடல் நலத்தைச் சீராக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணியாளர் தொல்லை அதிகரிக்கும். துணிந்து செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இதனால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்பின் தெரியாதவர்கள் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். 22.4.2023 அன்று மேஷ ராசிக்குச் செல்லும் குரு, அஷ்டமத்து குருவாக சஞ்சரிப்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சனிப் பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் சனிபகவான் அற்புதமான பலன்களை வழங்கப் போகிறார். தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். விபரீத ராஜயோகம் செயல்படப்போவதால் இனிய பலன்கள் ஏராளமாக வந்துசேரும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் வந்து சேரும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சி, அஷ்டமத்து ராகுவாக அடியெடுத்து வைப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். சுபச்செலவுகள் அதிகரிக்கும். எந்தப் பொறுப்பையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்க இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. புதன்கிழமை விரதமும், பெருமாள் வழிபாடும் நன்மை தரும்.


Next Story