கன்னி - ஆண்டு பலன் - 2022


கன்னி - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:45 PM IST (Updated: 23 May 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- பி, பு, பூ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

ஏழில் குரு வந்ததும் எல்லாம் நலமாகும்

கன்னி ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சனி பலம் பெற்றிருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் ராகு பலம் பெற்றிருக்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும் பதிகின்றது. எனவே வரவும், செலவும் சமமாகும். வருடத் தொடக்கத்தில் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. ஆயினும் குரு மீனத்திற்கு பெயர்ச்சியான பிறகு, தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். கிரகங்களின் வக்ர காலத்தில் மட்டும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் நற்பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன்மூலம் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் புதிய பாதை புலப்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வேலைவாய்ப்பை தேடியோ முயற்சிகள் செய்தால் அதில் வெற்றிகள் கிடைக்கும். 'சந்திர மங்கள யோகம்' இருப்பதால் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். விரயாதிபதி சூரியன் 4-ம் இடத்தில் இருப்பதால் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கு செலவிட்டு மகிழ்வீர்கள்.

'6-ல் குரு வந்தால் ஊரில் பகை' என்பார்கள். அந்த அடிப்படையில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கலாம். எதைச் செய்தாலும் முதலில் தடை ஏற்பட்டு பிறகு சரியாகும். ராகு-கேதுக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், ஏற்ற இறக்கம் இல்லாத வாழ்க்கை அமைய, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்துகொள்ளுங்கள். சப்தம குருவின் சஞ்சார காலத்திற்கு பிறகு அற்புதப் பலன்கள் வந்து சேரும்.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும், அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. இவை வாக்கு, தனம், குடும்பம் ஆகிய இடங்களைக் குறிப்பதாகும். புனிதம் பெறும் இந்த இடங்களினால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால், புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வர்.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதன் விளைவாக 8-ம் இடத்தில் ராகுவும், இரண்டாம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அஷ்டமத்தில் ராகு வருவதால் பணவிரயங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை விற்க நேரிடும். இருப்பினும் மறைந்த ராகுவால், நிறைந்த தன லாபமும் வந்து சேரும். சொத்துக்கள் வாயிலாக சிலருக்கு லாபம் கிடைக்கும். அதே சமயம் 2-ல் கேது சஞ்சரிப்பதால் யாருக்கேனும் வாக்கு கொடுத்தால் அதைக் காப்பாற்ற இயலாது. சிலருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். மீனத்தில் இருந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார். இதனால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது. ஆனந்தப் பூங்காற்று வீசும். துடிப்போடு செயல்படுவீர் கள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. இக்காலத்தில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறும் பொழுது, சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியும், கேந்திராதிபத்திய தோஷம் பெற்றவருமான குரு, வக்ரம் பெறுவது யோகம் தான். தாயின் உடல்நலம் சீராகும். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் பணிக்கு உறுதுணையாக இருந்து விலகியவர்கள், மீண்டும் வந்து இணையலாம்.

வளர்ச்சி தரும் வழிபாடு

இந்தப் புத்தாண்டு முழுவதும் வரும் புதன்கிழமைகள் அனைத்திலும் ஆலயங்களுக்குச் சென்று அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

ஏப்ரல் மாதத்திற்கு மேல் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 6-ல் இருப்பதால் உறவினர் பகை அதிகரிக்கும். ஊா் மாற்றம், வீடு மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் உங்கள் ராசியைப் பொறுத்தவரை அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். வில்லங்கம் பார்த்து வாங்காத சொத்துக்களாலும் சில பிரச்சினைகள் வந்துசேரலாம். விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.


Next Story