ஹூண்டாய் எக்ஸ்டர்


ஹூண்டாய் எக்ஸ்டர்
x

ஹூண்டாய் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 1.2 லிட்டர், 4 சிலிண்டர் கப்பா பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ள இந்தக் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாடல்கள் வந்துள்ளன. இது 83 பி.எஸ். திறனையும், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதன் அறிமுக சலுகை விலை சுமார் ரூ.6 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. சலுகை விலை பிறகு மாற்றப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சி.என்.ஜி. மாடலும் கிடைக்கும்.

சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.2 கி.மீ. தூரமும், சி.என்.ஜி. மாடல் ஒரு கிலோவுக்கு 27.1 கி.மீ. தூரமும் ஓடி, எரிபொருள் சிக்கனமான வாகனம் என நிரூபித்துள்ளது. பெட்ரோல் (ஆட்டோமேடிக் கியர்) மாடலின் விலை சுமார் ரூ.7.97 லட்சம். சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலின் விலை சுமார் ரூ.8.24 லட்சம். வாகனத்தின் முன்புறத்தில் பாராமெட்ரிக் கிரில் அமைப்பு, எல்.இ.டி. புரொஜெக்டர் முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு மற்றும் பின்பகுதியில் ஸ்கிட் பிளட், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

15 அங்குல அலாய் சக்கரம், பாலம் போன்ற அமைப்பைக் கொண்ட ரூப் ரெயில், சுறா மீன் துடுப்பு வடிவிலான ஆன்டெனா உள்ளிட்ட அம்சங்கள் இந்தக் காருக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

இந்த கார் 3,815 மி.மீ. நீளமும், 1,710 மி.மீ. அகலமும், 1,631 மி.மீ. உயரமும் கொண்டது. குரல்வழிக் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையிலான மேற்கூரை இதன் சிறப்பம்சமாகும். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளம், 8 அங்குல தொடு திரை, இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் அளிக்கும் புளூலிங்க் தொழில்நுட்ப செயலி 60 விதமான கூடுதல் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த 6 ஏர் பேக்குகள் உள்ளன.

9 கண்கவர் வண்ணங்களில் இந்தக் கார்கள் கிடைக்கும்.


Next Story