கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கம் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்


கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கம்  16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:38 PM IST (Updated: 12 Jun 2023 3:24 PM IST)
t-max-icont-min-icon

பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் கவர்னரை கண்டித்து ஜூன் 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க.வின் சிறப்பு தலைவர் போல செயல்பட்டு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தமிழகத்தில் உள்ள அறிஞர்களை தவிர்த்து, வட இந்திய சனாதன சித்தாந்தவாதிகளை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிட வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். இதனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் 9 லட்சத்து 29 ஆயிரத்து 142 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்காமல் தனது சட்டப்பூர்வமான கடமையை செய்ய தவறி உள்ளார். இதனால் மாணவர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

எனவே, மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமை தவறிய தமிழக கவர்னரை கண்டித்தும், உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வலியுறுத்தியும், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும் வரும் 16-ந் தேதி காலை 9 மணியளவில் சென்னை கவர்னர் மாளிகைக்கு அருகில் உள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story