நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜா தேவி (வயது 87) பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர்.
இந்திய திரையுலக வரலாற்றில் மிக சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சரோஜா தேவி.சரோஜா தேவி இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட சிறப்புகுரிய விருதுகளை பெற்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படம் மூலம் 1955-ல் திரையுலகில் தடம் பதித்தார் சரோஜா தேவி. 1958-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரோஜா தேவி பல மொழிகளில் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.நாடோடி மன்னம், அன்பே வா, ஆலயமணி, கல்யாண பரிசு, புதிய பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகர்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர் உடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்களில் நடித்துள்ளார்.






