
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 2வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினர். தொடக்கம் முதலே இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த இணையை லுங்கி என்கிடி பிரித்தார். நிதானமாக ஆடி வந்த வில் யங் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து சீனியர் வீரரான கேன் வில்லியம்சன் களம் கண்டார்.
ரச்சின் ரவீந்திரா-வில்லியம்சன் இணை நிதானமாக ஆடியது. இதில் பொறுமையாக விளையாடிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் விளாசினார். இந்த இணையை பிரிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர். அரைசதம் கடந்த பின்னர் ரச்சின் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் கேன் வில்லியம்சனும் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்த இணை தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. நிலைத்து நின்று ஆடிய ரச்சின் ரவீந்திரா இந்த தொடரில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்த பின் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 108 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து டேரில் மிட்செல், கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் சதம் அடித்த நிலையில் 102 ரன்களில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களம் இறங்கிய டாம் லாதம் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மிட்செலுடன், அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. இதில் மிட்செல் 49 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் கிளென் பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 362 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்னும், வில்லியம்சன் 102 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 363 ரன் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கும் முன்னேறலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆட உள்ளது.






