
பாரத் மண்டபத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து வழங்கினார்.
நாளந்தா பல்கலைக்கழகம்
டெல்லியில் நடந்து வரும் ஜி-20 உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று பல்வேறு அமர்வுகள் நடந்தன. அத்துடன் மாநாட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து வழங்கினார். இதற்காக பாரத் மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புகைப்படத்தை பின்புலமாக கொண்டு விருந்து அரங்கின் நுழைவாயில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் ஒருபுறம் உச்சி மாநாட்டின் லோகோவும், மறுபுறம் மாநாட்டின் கருப்பொருளும் இடம் பெற்றிருந்தன.
தலைவர்கள் வியப்பு
விருந்து நடைபெற்ற அரங்குக்கு வந்த தலைவர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் நாளந்தா பல்கலைக்கழக புகைப்படங்களை பார்வையிட்டு, பழங்கால இந்தியர்களின் கல்விப்புலமையை எண்ணி வியந்தனர்.
5 மற்றும் 12-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பீகாரில் இயங்கி வந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பை அவர்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை, தகுதி, சிந்தனை சுதந்திரம், கூட்டு நிர்வாகம், சுயாட்சி மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாக பிரதமர் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட ஜி-20 தலைவர்கள் வியப்பை வெளியிட்டனர். குறிப்பாக நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பை அறிந்து கொள்வதில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் அதிக ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.
அர்ப்பணிப்புக்கு சான்று
உலக அளவில் உருவான ஆரம்பகால சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகப் புகழ் பெற்ற நாளந்தா, இந்தியாவின் மேம்பட்ட கல்வியின் நீடித்த சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
மகாவீரர் மற்றும் புத்தரின் சகாப்தத்திற்கு முந்தைய மரபை கொண்ட இந்த பல்கலைக்கழகம் மக்களின் புலமையை வளர்ப்பதிலும், அறிவைப் பரப்புவதிலும் பண்டைய இந்தியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவின் ஜி-20 உச்சி மாநாட்டின் கருப்பொருளான வாசுதெய்வ குடும்பகம் என்ற உலகளாவிய பிணைப்பைக் கொண்டு இணக்கமான உலக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு வாழும் சான்றாகவும் இருந்தது என்பது சிறப்புக்குரியதாகும்.






