
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என நிரூபணமானதுடன், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி அளித்த அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஞானசேகரன் யார் யாரிடம் போனில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சொன்ன அண்ணாமலை, அவற்றை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய கோர்ட்டு, அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு கோர்ட்டு பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என தெரிவித்துள்ளது.






