
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டூர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 'சுங்கச்சாவடி பாக்கி ரூ.276 கோடியை செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண மாநில போக்குவரத்துத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க அனுமதிக்கக்கூடாது' என உத்தரவிட்டது.
இந்தநிலையில், தென்மாவட்ட சுங்கச்சாவடிக்கு தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்துவது தொடர்பான பிரச்சினை மாநில போக்குவரத்து துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் நல்ல ஒரு தீர்வை எட்ட உள்ளதாகவும், எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜராகி முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.






