
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது முற்றிலும் சரியானது. 2015-ம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்கு பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 ஆயிரம் செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.
நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியை தான் இவர்களும் செய்கின்றனர். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களை விட தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த பணியையே செய்வதாக கூறி அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், பணி நிலைப்பு வழங்கவும் தி.மு.க. அரசு மறுத்து வந்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு ஆணைப்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகு தான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்க ஐகோர்ட்டு ஆணையிட்டது. ஆனால், அதனை கூட செய்ய தி.மு.க. அரசு மறுக்கிறது.






