பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில்3 கோடி வாக்காளர்களுக்கு நெருக்கடி

புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. எனவே, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் தொடங்குகிறது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, பிழையற்ற வாக்காளர் பட்டியலை தயாரிக்க உறுதி பூண்டுள்ளது. இதற்காக வாக்காளர் பதிவு அதிகாரிகள், வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்ப்பார்கள்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 7 கோடியே 89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு நடந்த சிறப்பு திருத்தத்துக்கு பிறகு 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர்.
எனவே, தேர்தல் கமிஷன் விரைவில் 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறது. அதில் இடம்பெற்றுள்ள 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்களும் எந்த ஆவணத்தையும் அளிக்க வேண்டியது இல்லை. ஆனால், மீதி சுமார் 3 கோடி வாக்காளர்கள் தங்களது பிறந்த இடம் அல்லது தேதியை நிரூபிக்க தேவையான 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.






