
கரூர் துயரம்: விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் விபத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். விஜய் தார்மீகப் பொறுபேற்றிருந்தால் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்காது என்றே நான் நினைக்கிறேன். இந்த விபத்தை தவெக திட்டமிட்டு ஏற்படுத்தவில்லை என்றாலும், கரூர் விபத்துக்கான தார்மீகப் பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் இருக்கிறது.
கரூர் சம்பவத்தில் முதல்-அமைச்சரின் நடவடிக்கை நிதானமாக இருந்தது. அது அவரது நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டியது. விஜய்யை கைது செய்யக்கோரி குரல்கள் வந்தபோதும் கூட முதல்-அமைச்சர் நிதானமாக கையாண்டர். முதல்-அமைச்சருக்கு யாரையும் கைது செய்யும் எண்ணம் இல்லை. வருங்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது என்ற பொறுப்புணர்வுதான் முதல்வரிடம் தென்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






