கரூர் துயரம்: விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

கரூர் சம்பவத்தில் பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் விபத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். விஜய் தார்மீகப் பொறுபேற்றிருந்தால் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்காது என்றே நான் நினைக்கிறேன். இந்த விபத்தை தவெக திட்டமிட்டு ஏற்படுத்தவில்லை என்றாலும், கரூர் விபத்துக்கான தார்மீகப் பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக இதில் அரசியல் செய்கிறார்கள். அதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சிவசப்படும் சீமான்கூட கரூர் விவகாரத்தில் நிதானமாக கையாளுகிறார். ஆனால் வழக்கம்போல பதவி வெறியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். வழக்கம்போல பழனிசாமியின் நடவடிக்கை அநாகரீகமாக உள்ளது.
ஆளுங்கட்சிதான் காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சாடுவது மோசம். கரூரில் திட்டமிட்ட சதியெல்லாம் இருக்காது; கூட்டம் அதிகமாகி நெரிசலில் மிதிபட்டு இறந்திருக்கிறார்கள். தவெகவினருக்கு அரசியல் ரீதியான அனுபவம் இல்லாத காரணத்தால் நடந்த பிழைதானே தவிர வேறில்லை.
கரூர் சம்பவத்தில் பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக குழு ஏன் வரவில்லை? கரூர் சம்பவத்தை சதி என்று அண்ணாமலை கூறியது வருந்தத்தக்கது. ஆட்சிக்கு வரவேண்டும் என்று பழனிசாமி தலைகீழாக நின்றாலும், அமமுக அவரை வீழ்த்தாமல் விடாது.
இந்த கொடிய துயரத்தை அரசியலாக்காமல், இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க கட்சியினரும் சரி, போலீசாரும் சரி செயல்பட வேண்டும்.
தவெகவின் வழக்குகள், வழக்கறிஞர்களின் வாதங்கள் பொறுப்பற்ற தன்மையை காட்டின. பிரச்சினையை திசைதிருப்பும் வகையில் பேசியதாலேயே கோர்ட்டு கண்டனம் தெரிவித்ததாக கருதுகிறேன். தவெகவினர் துணிச்சலாக நடந்து கொள்ள வேண்டும். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பொறுப்பற்றது.
விஜய்யை மதரீதியாக விமர்சிக்கக் கூடாது. அது எச்.ராஜாவின் பார்வைக்கோளாறு. ஜோசப் விஜய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே. அதில் என்ன தவறு? வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் சாதி, மதம் எல்லாம் பார்ப்பதில்லை.
கரூர் சம்பவத்தில் முதல்-அமைச்சரின் நடவடிக்கை நிதானமாக இருந்தது. அது அவரது நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டியது. விஜய்யை கைது செய்யக்கோரி குரல்கள் வந்தபோதும் கூட முதல்-அமைச்சர் நிதானமாக கையாண்டர். முதல்-அமைச்சருக்கு யாரையும் கைது செய்யும் எண்ணம் இல்லை. வருங்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது என்ற பொறுப்புணர்வுதான் முதல்வரிடம் தென்பட்டது.
எந்த கட்சித் தலைவரும், சொந்த கட்சித் தொண்டர்களோ, நிர்வாகிகளோ இறப்பதை விரும்பமாட்டார்கள் என்ற முதல்-அமைச்சரின் கருத்து சரியே. இவ்வாறு அவர் கூறினார்.






