
மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது தீவிர காயம் ஏற்பட்டது. இதன் பின்னர், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் உள்பட வேறு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இவர் இல்லாத ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனால் இவரது வருகையை மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், காயத்திலிருந்து முழு அளவில் குணமடைந்த பும்ரா மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.
எனினும் அவர் பெங்களூருவுக்கு எதிரான நாளைய போட்டியில் களமிறங்குவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அறிவித்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.






