திமுக ஆட்சியில் உழவர் நலன் காக்கும் திட்டங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.25.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய அவர், விவசாயிகளால்தான் உணவு கிடைத்து மக்கள் உடல் நலத்தோடு உள்ளனர் என்றும், விவசாயிகளால்தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், காவிரி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். இது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டார்.






