
அகமதாபாத் விமான விபத்து.. சம்பவம் என குறிப்பிட்டு பின்னர் திருத்திய ஏர் இந்தியா
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் முதலில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இதை விபத்து என குறிப்பிடாமல் சம்பவம் (Incident)குறிப்பிட்டிருந்தது.
“அகமதாபாத்-லண்டன் காட்விக் வழித்தடத்தில் சென்ற AI171விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியது. இதுபற்றி விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் கூடுதல் தகவல்களை ஏர் இந்தியாவின் இணையதளம் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறோம்“ என அதில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் என்று கூறியதால் இது விபத்தா? அல்லது சதி செயலா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. அதன்பின்னர் வெளியிட்டுள்ள பதிவில் விபத்து என குறிப்பிட்டிருந்தது. அதில், முழு விவரங்களையும் வெளியிட்டது.
அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டினர் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.






