
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது
கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்பட மற்ற சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம்விடப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 450-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.






