கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது


கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது
x

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.

குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் இன்று தொடங்கியது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை நீடிக்கும்.

இந்த சீசன் தொடங்கியதையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் இன்று அதிகாலையில் இருந்தே குவிய தொடங்கினர். இன்று காலை சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் குவிந்திருந்தனர். இன்று காலை சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரிந்தது. சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.

பின்னர் பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்பட பல கோவில்களுக்கு சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்பட மற்ற சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம்விடப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 450-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story