
சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (சனிக்கிழமை) மாலை கஜமுகசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி அசுரனை வதம் செய்ய வீதி உலா வருகிறார். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் தெப்பக்குளம் முன்பு சூரனை யானை தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.






