'கண் கலங்கினேன்...கமல்ஹாசனால் 3 நாட்கள் குளிக்கவில்லை' - சிவராஜ்குமார்

'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சென்னை,
கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், 'கமல்ஹாசனின் பெரிய ரசிகன் நான். முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் உங்களில் நானும் ஒருவன். கமல்ஹாசன் என்றால் எனக்கு உயிர். அவருடைய சிரிப்பு, கண், தோற்றம் எல்லாமே பிடிக்கும். ஒரு நாள் என் வீட்டிற்கு கமல்ஹாசன் வந்திருந்தார். அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அப்போது அவர் எனக்கு கை கொடுத்தார். கட்டி பிடிக்கலாமா என்று கேட்டேன். ஆம், என்றார். அதன் பின் 3 நாட்கள் குளிக்கவில்லை. அவ்வளவு பெரிய ரசிகன் நான். எனக்கு கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு எனக்கு கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அப்போது அவர் சிக்காகோவில் இருந்தார். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவரிடம் பேசிய பிறகு கண் கலங்கி விட்டேன். அதை என்னால் மறக்கவே முடியாது. இன்று அவருடைய படத்திற்கு நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருப்பதை பெருமையாக நினைக்கிறேன்.' என்றார்.






