பிருத்விராஜ் படப்பிடிப்பு தளத்தில்... 16 வயது சிறுமி, தாய்க்கு 2 வாரங்களாக பாலியல் தொல்லை; நடிகை அதிர்ச்சி தகவல்
கேமிராமேன்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படக்குழுவை சேர்ந்த பலரும் அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
கொச்சி,
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மேற்கு வங்காள நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகர், இயக்குனர் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவரான ரஞ்சித் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொது செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகார் கூறினார். இதனை தொடர்ந்து, நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார்.
இதுவரை, பட இயக்குனர்கள் ரஞ்சித், துளசிதாஸ், வி.கே. பிரகாஷ் மற்றும் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், பாபுராஜ், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு மற்றும் தயாரிப்பு நிர்வாகிகளான நோபல், விச்சு, விளம்பர இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மற்றொரு பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் பற்றிய தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான படத்தின் படப்பிடிப்பின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
2008-ம் ஆண்டு ஒன் வே டிக்கெட் என்ற படம் வெளியானது. பிபின் பிரபாகர் இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் மற்றும் பாமா ஆகியோர் நாயகன், நாயகியாகவும், நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்திலும் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம் பற்றிய தகவல் வெளிவந்து உள்ளது.
இதுபற்றி நடிகை ஒருவர் கூறும்போது, படப்பிடிப்பு தளத்திற்கு அருகே உள்ள அறையொன்றில் 16 வயது சிறுமி மற்றும் அவருடைய தாய் இரண்டு பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் படப்பிடிப்பு குழுவினர் சந்தித்து வந்துள்ளனர். ஆனால், 2 வாரங்களாக அந்த அறையில் தங்கியிருந்த அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து செல்லப்படவில்லை.
இந்த காலகட்டத்தில், கேமிராமேன்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படக்குழுவை சேர்ந்த பலரும் அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வேதனையான சம்பவம் பற்றி அவர்கள் இருவரும் தன்னிடம் தெரிவித்து அழுதனர் என அந்த நடிகை தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பட இயக்குநர் உள்பட படத்தின் மூத்த கலைஞர்கள் யாருடனும் அவர்களுக்கு எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால், படத்தில் நடிக்கும் பெண் கலைஞர்கள் உள்பட பல பெண்கள் மலையாள திரையுலகில் பாதிக்கப்பட்ட சம்பவம் அடுக்கடுக்காக வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.