‘45 தி மூவி’ பட டிரெய்லர் - ரசிகர்களை கவர்ந்த சிவராஜ்குமாரின் பெண் தோற்றம்

சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘45 தி மூவி’ படத்தை அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார்.
சென்னை,
கன்னட திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ்குமார் நடிப்பில் வருகிற 25-ந்தேதி ‘45 தி மூவி’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது. டிரெய்லர் காட்சிகளில் வெளியான சிவராஜ்குமாரின் பெண் தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் விழாவிற்கு வந்திருந்த சிவராஜ் குமாரின் மனைவி கீதா கணவரின் பெண் தோற்றத்தை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவராஜ்குமார் பேசுகையில், ‘45 தி மூவி’ எனது 129-வது படம். இயக்குநர் அர்ஜுன் ஜன்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45 தி மூவி’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குநர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும். அது டூயட் பாடலாக இருந்தாலும் சரி, கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி. நாங்கள் இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






