"காந்தாரா 2" படப்பிடிப்பில் விபத்து; ரிஷப் ஷெட்டிக்கு நோட்டீஸ்


காந்தாரா 2 படப்பிடிப்பில் விபத்து; ரிஷப் ஷெட்டிக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 16 Jun 2025 7:17 AM IST (Updated: 17 Jun 2025 6:20 PM IST)
t-max-icont-min-icon

'காந்தாரா 2' படப்பிடிப்பின்போது அணையில் படகு கவிழ்ந்தது. இதில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்பட 30 பேர் உயிர் தப்பினர்.

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர்-1' என்ற தலைப்பின் காந்தாரா படத்தின் 2-ம் பாகத்தை எடுத்து வருகிறார். இதிலும் அவரே கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று காலை மாணி அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஒரு சிறிய படகில் வைத்து படப்பிடிப்பு நடந்தது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க, துணை நடிகர்கள், கேமரா குழுவினர் என 30 பேர் அந்த படகில் இருந்தனர். அந்த பகுதி அதிகம் ஆழம் இல்லாத பகுதி என்று கூறப்படுகிறது.

திடீரென எந்த படகு கவிழ்ந்தது. இதனால் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்பட அனைவரும் அணை நீரில் தத்தளித்தனர். அவர்களில் சிலர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். மற்றவர்களை அங்கு தயாராக இருந்த மீட்பு படையினர் மீட்டனர். இருப்பினும் கேமராக்கள் மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகள், நவீன எந்திரங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை அணை நீரில் மூழ்கி நாசமாகின. அவை அனைத்தும் பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் விபத்து குறித்து நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.

கடந்த மாதம் இதேபோல் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 3 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story