நடிகை சவுந்தர்யா குழந்தை போன்றவர் - ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் தனது திரை வாழ்க்கை குறித்த பல விஷயங்களைப் நேர்காணலில் மறைந்த நடிகை சவுந்தர்யா குறித்து பேசியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சவுந்தர்யா. இவர் பொன்னுமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினியுடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா, கமலுடன் காதலா காதலா, விஜயகாந்துடன் தவசி மற்றும் சொக்கத்தங்கம், சத்யராஜூடன் சேனாதிபதி என சில படங்கள் மட்டுமே நடித்தார். அன்றைய காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் சவுந்தர்யா. ஆனால் துரதிஷ்டவசமாக 2004-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என திரை உலகில் 4 தலைமுறைகளாக கதாநாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலி சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை மிரள வைத்தது. அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் பெற்று வருகிறது. இவர் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை ஒன்றாக இணைந்து ‘பாகுபலி எபிக்’ என்ற டைட்டிலில் முழு நீள திரைப்படமாக வரும் 31ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் நேர்காணலில் ரம்யா கிருஷ்ணன் தனது திரை வாழ்க்கை குறித்த பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்த அவர் மறைந்த நடிகை சவுந்தர்யா பற்றியும் அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதில் “நான் ‘படையப்பா’ உட்பட அவருடன் பல படங்களில் வேலை செய்திருக்கிறேன். அவர் மிகவும் இன்னொசென்ட். அழகான குழந்தை போன்றவர் அவர். அவராகவே சினிமாவில் வளர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார். புகழ் அவரை ஒரு துளிகூட மாற்றவில்லை. சவுந்தர்யாவைப் போன்ற அழகான மனிதரை நான் முதன் முதலில் `அமரு' என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் சந்தித்தேன்.அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட." என்றார்.
ரம்யா கிருஷ்ணனும், சவுந்தர்யாவும் `படையப்பா' , `அமரு', `ஹலோ பிரதர்' என்ற மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.






