‘ரசவாதி’ படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச விருது
இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை கடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த வண்ணமுள்ளது.
சென்னை,
'ரசவாதி' படத்திற்காக பிரான்ஸில் நடைபெற்ற நைஸ் (NICE) சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றுள்ளனர் சரவணன் இளவரசு மற்றும் சிவா.
சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படம் ''ரசவாதி''. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைக் கடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்த வண்ணமுள்ளது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.
மேலும், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை இப்படம் வென்றது. இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற நைஸ் (NICE) சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை சரவணன் இளவரசு மற்றும் சிவா வென்றுள்ளனர்.








