“மூன்வாக்” படத்தின் மினி கேசட் வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்


“மூன்வாக்” படத்தின் மினி கேசட் வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
x

28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

சென்னை,

தமிழ் திரையுலகில் 1990-களில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' படத்தின் மூலம் இணைந்தார்கள். தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சார கனவு' ஆகிய படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, அதாவது 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்’ என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘லஹரி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ‘மூன்வாக்’ படத்தின் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. ‘மூன்வாக்’ படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ‘மூன்வாக்’ படத்தின் மினி கேசட் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களின் முதல் 1 நிமிடம் இடம்பெற்றுள்ளது. பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து பன் மோடில் இந்த வீடியோவை கொண்டு சென்றுள்ளனர்.

‘மூன்வாக்’ படத்தில் அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

1 More update

Next Story