“சென்சார் காரணமாக நீக்கப்பட்ட கெட்ட வார்த்தை”: சென்றாயனின் வருத்தத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆறுதல்!

'ரிவால்வர் ரீட்டா' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.
சென்னை,
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிவால்வர் ரீட்டா'. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ள இந்த படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் நடிகர் சென்றாயன் பேசியதாவது:-
இந்த படத்தில் சென்னையில் பலர் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை ஒன்றை கஷ்டப்பட்டு பேசி நடித்தேன்.சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்துவிட்டு படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள கெட்ட வார்த்தை தமிழ்நாட்டுக்கு சரிவராது என்று சொல்லி அந்த ஒரு வார்த்தையை மட்டும் மியூட் செய்ய சொல்லிவிட்டார்கள்.
இப்போது டிரெய்லர் பார்க்கும் பொழுது அந்த வார்த்தை இல்லாதது அழுகையாக வருகிறது. ஏனென்றால் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தேன். சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் தட்டினால் அவ்வளவு வார்த்தைகள் வந்து கொட்டுகிறது. இவ்வாறு வருத்தத்தோடு பேசினார்.
தொடர்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ், “சென்றாயன் படத்தில் அந்த வார்த்தையை தூக்கி விட்டார்கள் என்று வருத்தப்படுகிறீர்கள். நீங்கள் வருத்தப்படுவதற்கான அவசியம் இல்லை. கண்டிப்பாக அந்த வார்த்தையை படத்தில் வைக்க முடியாது. அது சென்சார் போர்ட் மட்டுமல்ல யார் கேட்டாலும் தப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை உங்கள் நடிப்பு சொல்லிவிடும் அந்த வார்த்தைதான் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் என்பது கிடையாது. நிச்சயமாக படம் நன்றாக வரும்.” இவ்வாறு அவர் சென்றாயனுக்கு ஆறுதல் தெரிவித்து பேசினார்.






