‘புரோ கோட்' தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த தடை

"புரோ கோட்" என்ற டைட்டிலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் தற்போது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் "டிக்கிலோனா" படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் 'புரோ கோட்' என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் (INDOSPIRIT BEVERAGES) புரோ கோட் (BRO CODE) என்ற டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், ‘புரோ கோட்’ என்பது தங்களது வர்த்தக முத்திரை மற்றும் படத்திற்கு இதுபோன்ற தலைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வர்த்தக உரிமைகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில் சென்னை ஐகோர்ட்டு ரவி மோகனுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், மதுபான நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தேஜஸ் கரியா, புரோ கோட் படத்தின் தலைப்பை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.






