சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாக்யராஜுக்கு பாராட்டு விழா

சென்னை கலைவாணர் அரங்கில் பாக்யராஜுக்கு வரும் 7ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து சினிமா கலையை கற்றுக் கொண்டவர் பாக்யராஜ். இவரை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவரும் பாரதிராஜாதான். கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தை இயக்கும் போது தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் பாக்யராஜ். கிழக்கே போகும் இரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களிலும் பாக்யராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1979ல் புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதே ஆண்டில் பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
உதவி இயக்குநராக பணியாற்றுவதற்கு முன்பே சினிமாவில் பாக்யராஜ் நுழைந்து விட்டதால் தற்போது 50 ஆண்டுகளைக் கடந்து விட்டது என அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மகன் சாந்தனு ஆகியோர் இணைந்து விழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக இவர்கள் இருவரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக வரும் 7ம் தேதி அவரின் பிறந்தநாளில் சென்னை, கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க வரும்படி முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுத்தார் பாக்யராஜ். உடன் அவரது மனைவி, நடிகை பூர்ணிமாவும் சென்றார்.






