ரீ-ரீலீஸில் வெற்றி பெற்ற “ஆட்டோகிராப்” - நன்றி தெரிவித்த சேரன்


ரீ-ரீலீஸில்  வெற்றி பெற்ற  “ஆட்டோகிராப்” - நன்றி தெரிவித்த சேரன்
x
தினத்தந்தி 25 Nov 2025 6:49 PM IST (Updated: 25 Nov 2025 9:25 PM IST)
t-max-icont-min-icon

ரீ-ரீலிஸில் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து, இயக்குநர் சேரன் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

இப்படம் பள்ளி, கல்லூரியின் கடந்தகாலக் காதல்களுடன் இளைஞர்களுக்கான உத்தேவகத்தை அளிக்கும் படமாக உருவாகியிருந்தது. வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம், 21 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 14 ம் தேதி ரீ-ரீலிஸ் செய்யப்பட்டது. ரீ-ரீலிஸிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், 'ஆட்டோகிராப்' படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு சேரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “21 வருடங்களுக்கு பின் வெளியானபோதும் கொண்டாடி படம் பார்த்து பாராட்டிய அனைத்து மக்களுக்கும் நன்றி...சில புதிய படங்கள் மூன்று நாட்கள் திரையரங்கில் தொடர்வது கடினமாக இருக்கும் காலத்தில் மறு வெளியீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் ஓடியிருப்பது மகிழ்ச்சி... அதற்கு ஒத்துழைத்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் தந்த அனுபவங்களை உங்களின் வாழ்க்கையோடு எடுத்துச்சென்று, சுகமான நினைவுகளை அசைபோட்டு, எதார்த்தங்களோடு இணைந்து வாழ, அனைவரின் வருங்கால வாழ்க்கையும் சிறப்படைய வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.

1 More update

Next Story